ஈரோடு : 105 அடி நீர்மட்ட உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆண்டுதோறும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.124 மைல் நீள்முள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி 55ஆவது மைலில் உள்ள நசியனூர் மலைப்பாளையம் வாய்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் வாய்க்காலில் சென்ற ஆயிரம் கனஅடி நீர் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. கடந்த 20 நாள்களாக கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்து கரையை பலப்படுத்தும் பணி இரவு பகலாக நடைபெற்றது.
8 மீட்டர் உயரமும் 90 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் கரைக்கான பணி தற்போது நிறைவு பெற்றுள்ளதால் 20 நாள்களுக்கு பிறகு சோதனை ஓட்டமாக முதலில் 200 கனஅடி நீர் இன்று(செப்.12) காலை திறந்துவிடப்பட்டது. இந்த நீரானது ஐந்து நாள்கள் பயணித்து மலைப்பாளையம் வாய்க்காலை சென்றடையும்.
வாய்க்காலில் கசிவு ஏற்படாமல் உறுதி தன்மையுடன் இருப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்த பிறகு வாய்க்காலில் திறந்த விடப்பட்ட நீரானது படிப்படியாக உயர்ந்து 2 ஆயிரத்து 300 கனஅடியாக அதிகரிக்கும். கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவதால் நெல் நாற்றங்கால் தயாரிக்கும் பணி தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : பி.எட் பட்டப்படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்