ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியிலுள்ள 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் நகர்ப்பகுதியின் மத்தியில் பவானி ஆறு ஓடுகிறது. நகராட்சி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சாக்கடைகளில் கலந்து சாக்கடை கால்வாய் வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது.
தற்போது பவானிசாகர் அணையிலிருந்து 100 கனஅடிநீர் மட்டுமே திறக்கப்படுவதால் ஆற்று நீரை விட சாக்கடை நீர் அதிகமாக இருக்கிறது.
இந்த நீரை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலும், பவானி ஆற்றங்கரையோரம் பன்றிகள் வளர்க்கப்படுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்றின் நீர் வழிபாதையில் மாற்றம் ஏற்பட்டு ஆற்றுநீர் சீராக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
பன்றிகளால் நோய் பரவும் அபாயம்:
குறிப்பாக பழைய தபால் ஆபிஸ் வீதியில் தேங்கியிருக்கும் நீரில் பன்றிகள் நடமாடுவதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மக்கள் குடியிருப்பு பகுதியில் பன்றிகள் வளர்க்கக்கூடாது என அரசு கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் ஆற்றங்கரையோரம் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன.
தற்போது சுகாதார துறையின் பல்வேறு கட்டுபாடுகளால் டெங்கு, மலேரியோ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பன்றிகளால் நோய் பரவாமல் தடுக்க பவானி ஆற்றங்கரையோரம் உள்ள முள்செடிகளை அகற்றியும், பன்றிகளை அப்புறப்படுத்தியும் சத்தியமங்கலம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பழைய தபால் ஆபிஸ் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் - மாசடையும் நொய்யல் ஆறு