ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த அலெக்சாண்டர் அவல் (14), பூந்துறையிலுள்ள தனியார் பள்ளியொன்றில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்குச் சென்ற அவர், பள்ளியருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறையினர், உங்களது மகன், நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவுவதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார் என்றும், அப்போது தவறி விழுந்து இறந்துவிட்டார் எனவும் மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச்சூழலில் தங்களது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த மாணவனின் பெற்றோர், தங்களது மகன் இறப்பு குறித்து விசாரித்து உண்மையைக் கண்டறியவேண்டும் என்றும் அதுவரைத் தங்களது மகனின் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்து அவர்களுடைய உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதாகவும் சடலத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் துறையினர் உறுதியளித்த பின்னர், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மாணவனின் சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: போராட்டம்... தடியடி... போர்க்களமாய் மாறிய வண்ணாரப்பேட்டை