ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆண்ட்ராய்டு செல்போனில் "ஏடிசி நியூஸ்" யூடியூப் சேனலில் நியூஸ் பார்த்தாலே வருமானம் என்ற நோட்டீஸ் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உலா வந்தன. அதில் முழு நேரம், பகுதி நேரம் சம்பாதிக்கும் வாய்ப்பு, ஆண்ட்ராய்டு செல்போன் வைத்துள்ள அனைவருக்கும் வேலை, ஆட்கள் யாரையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், யூ டியூப் சேனலில் நியூஸ் பார்ப்பதற்கு மைக்ரோ, மினி, பேசிக், சில்வர், கோல்டு, டைமண்ட் போன்ற திட்டங்கள் இருப்பதாகவும், குறைந்தபட்சமாக ரூ.1,440 முதல் 46,080 ரூபாய் வரையிலான பலத் திட்டங்களில் பணம் கட்டி சேர்ந்தால், மாதந்தோறும் ரூ. 272 முதல் 8,704 ரூபாய் சம்பாதிக்கலாம் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதையடுத்து காவல் துறை கவனத்திற்குச் சென்றது. பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், நாமக்கல்லில் ஆலம்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார்(25), ஈரோட்டில் தேவஸ்தானபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன்(25) ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் பிஇ பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஈரோடு நகர குற்றவியல் காவல் துறை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்ட நகலை எரிக்க முயற்சி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது