ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையத்தில் கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 400 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டு கோழி குஞ்சுகளும், 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கோழிகளையும், கறவை மாடுகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் முதலமைச்சர் தேர்தலுக்கு முன்னரே விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார். 15 நாள்களில் அதற்கான ரசீது வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். விவசாயக் கடன் தள்ளுபடியில் தமிழ்நாட்டிலேயே கூடுதலாக பயனடைந்த மாவட்டம் ஈரோடுதான். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளை நூலகங்களாக அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. பத்துக்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சி மூலம் பயின்ற மாணவர்களின் கல்வித் தரத்தை ஆய்வுசெய்ய திறனாய்வுத் தேர்விற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நீட் தேர்வுக்கு 21 ஆயிரம் பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நீட் தேர்விற்குப் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இலவசப் பயிற்சிக்கு ஐந்தாயிரத்து 817 பேர் பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
தேர்தல் தேதி வந்தவுடன் பொதுத்தேர்வுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான சீருடை, காலணி போன்ற அனைத்துப் பொருள்களும் அவர்களது வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவரும் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்க அரசுப் பள்ளிகளில் பயிற்சிப் பெற்றவர்கள் இல்லை. அதனால் தனியார் மூலம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் கோட்டாட்சியர் ஜெயராமன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர், வட்டாட்சியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.