ஈரோடு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த தென்காசியை சேர்ந்த ஞானசேகரன்(31) என்பவரை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பொறியியல் பட்டதாரியாவார். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு பரப்புரை செய்திருந்த நிலையில், ஞானசேகரன் தனது முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
இந்த கருத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூக மக்கள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை நியாயப்படுத்தும் விதமாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் மீது ஈரோடு கிழக்கில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஞானசேகரனை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே அவர் ஈரோட்டிலேயே பதுங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக அருந்ததியர் மக்கள் குறித்து பேசிய சீமான் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.. முன்னாள் மதுப்பிரியரின் நச் போஸ்டர் மெசேஜ்..