ஈரோடு: அசோகபுரத்தில், கர்நாடக மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாக கொண்ட தனியார் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் தொழிலாளர்கள் 8 பேரை நிர்வாகம் பணிநீக்கம் செய்து விட்டு, அவர்களுக்கு பதிலாக வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ஈரோடு நகரின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகபுரத்தில் உள்ள நிறுவனத்தின் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “வட மாநில தொழிலாளர்களை சுமை தூக்கும் பணியில் ஈடுபடுத்தினால், ஈரோடு நகரில் பணிபுரியும் 7 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், அவர்களை சார்ந்த குடும்பங்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே எந்த நிறுவனத்திலும் வடமாநில தொழிலாளர்களை சுமை தூக்கும் பணியில் அனுமதிக்க கூடாது” என வலியுறுத்தினர்.
மேலும், ஏற்கனவே தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதில் நிறுவனத்திற்கும், சுமை தூக்கும் பணியாளர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்ததாகவும், இதனை காரணமாக வைத்து தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த, சரக்கு போக்குவரத்து கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகி ஒருவர் தொழிலாளர்கள் மீது மோதியதாக கூறி, அவரை சுற்றி வளைத்து பிடித்து தொழிலாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனிடயாக அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
தொழிலாளர்களின் போராட்டத்தையடுத்து நிறுவனத்தில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் ஏழு பேரையும் அந்நிறுவனம் உடனடியாக பாதுகாப்பாக வெளியே அனுப்பியது. தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீசாரும், சரக்கு போக்குவரத்து அமைப்பின் நிர்வாகிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: 'சம்பளம் தரப்படவில்லை' - துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்