ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதால், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அன்று பள்ளிக்குச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மாணவியை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது தாயார், நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடத்தப்பட்ட மாணவி
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, காணாமல்போன மாணவியைத் தேடிவந்தனர். இது தொடர்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து நம்பியூர் அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அந்த இளைஞரைக் கண்ட காவல் துறையினர், அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது அவர் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் இவர் மாணவியின் உறவினர் என்பதால் அவ்வப்போது அவரது வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
கடத்தியவர் கைது
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அன்று, ஆசைவார்த்தைக் கூறி மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞரை போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் கைதுசெய்த காவல் துறையினர், மாணவி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மாணவியைக் கடத்தியது தொடர்பாக காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்ததை முன்னதாக அறிந்துகொண்ட இளைஞர், மாணவியை கெட்டிசெவியூரில் விட்டுவந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து மாணவியை மீட்ட காவல் துறையினர், அவரை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு