ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் ஒற்றை கருப்பன் யானை தினந்தோறும் வனத்தை ஒட்டி உள்ள கிராமத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம், கரும்பு, தென்னைப் பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இதையடுத்து விவசாயிகள் இரவு நேரங்களில் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட போது, இரவு காவலுக்குச் சென்ற இரு விவசாயிகளை கருப்பன் யானை தாக்கிக் கொன்றது. தொடர்ந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளைக் கொன்று அச்சுறுத்தும் ஒற்றை யானையைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஒற்றை கருப்பன் யானையை பிடிக்க அரிசி ராஜா, முத்து கபில்தேவ், மற்றும் கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. மேலும் 4 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனப் பணியாளர்கள் ஒற்றை யானையைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக நேற்றிரவு மரியபுரம் தொட்டி மற்றும் ரங்கசாமி கோயில் வழித்தடத்தில் பலா பழங்களை வைத்து விடியும் வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். தினந்தோறும் வரும் ஒற்றை கருப்பன் யானை நேற்று இரவு வரவில்லை என்பதால், ஏமாற்றம் அடைந்த வனத்துறை வனப்பணியாளர்கள் வனத்துக்குள் சென்று, கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்னர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி காலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!