ஆளை மயக்கும் மனம் கொண்டது மல்லிகைப் பூ. ஆனால், தற்போது பூவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்க்கையில் மணம் வீசவில்லை என்பதுதான் நிதர்சனம். மல்லி என்றதும் நம் நினைவுக்கு வருவது மதுரை மல்லி தான். வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மல்லிகைப் பூவை விவசாயிகள் ஏராளமாக சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது கரோனா தொற்று அபாயத்தால் நாடே முடங்கி கிடக்கும் நிலையில், மலர் சந்தைகள் முடங்கி விட்டன. இதனால் அவர்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிறரது மனதை மயக்கும் மல்லி பூ கவலைக்கிடமான நிலையில் இருப்பதுதான் வேதனையே.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் மல்லிகைப் பூக்கள் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
அதேபோன்று அண்டை மாநிலங்களான, பெங்களூரு, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது நிலவி வரும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 25ஆம் தேதி முதல் பூ மார்க்கெட் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மல்லிகைச் செடிகளில் பூக்கள் பறிக்கப்படவில்லை. செடிகளில் பூத்து மலர்ந்து கிடக்கும் மல்லிகை பூக்கள் வீணாக மண்ணில் உதிர்ந்து விழுகின்றன.
மல்லிகையை சாகுபடி செய்த விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ள சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு உள்ளதால் மல்லிகைப் பூச்செடிகளில் மாடுகளை விட்டு மேய்ப்பதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கடன் தொகை செலுத்த மூன்று மாதம் அவகாசம் - முதலமைச்சர் பழனிசாமி