ஈரோடு மாவட்டம் பவானி மேட்டூர் வலதுகரை கால்வாய் கரைகளின் இருபுறமும் கான்கிரீட் அமைத்து பலப்படுத்திடவும் முழுமையாகப் பராமரித்திடவும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன் ஒரு பகுதியாக 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தியூர் அருகேயுள்ள பூதப்பாடியில் வலது கரை வாய்க்காலின் ஒரு பகுதியை பலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.சி. கருப்பணன், "மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு சிறப்பான முறையில் செயல்படுத்திவருகிறது. குறிப்பாக, முதலமைச்சர் அறிவித்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது" என்றார்.
மேலும், தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் கேரளா மாநிலம் முக்கிய பங்கு வகிப்பதால் தமிழ்நாடு, கேரள அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள் என்று கூறிய அவர், டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்காது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2021இல் அதிமுக ஆட்சியே மீண்டும் தொடரும்...! - அமைச்சர் காமராஜ்