ஈரோட்டில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டி வருகிறது. மாலை நேரங்களில் சற்று இதமான காற்று வீசினாலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலையில் மாவட்டம் முழுவதும் இடியுடன் கனமழை பெய்தது.
ஈரோடு, பெருந்துறை, அந்தியூர், சென்னிமலை, பவானி உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டது. இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேபோன்று திருப்பூர் மாநகரப் பகுதியான செரீப் காலனி, ராயபுரம், கல்லாங்காடு, கருவம்பாளையம், ஆண்டிபாளையம், பாளையகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான காங்கேயம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், அவிநாசி, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையின் காரணமாக விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.