ஈரோடு: பெருந்துறையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனம் (readymade) இன்ப்ரா டெக்ஸ். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கரூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய உயர்தரமான ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழில் கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்தத் தொழிற்கூடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருவதுடன் வட மாநில தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு இந்த தொழிற்சாலை இருக்கக்கூடிய பகுதிகளில் தங்கும் வசதியுடன் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த தொழிற்சாலைகளுக்கு வரும் ஆண், பெண் எனத் தொழிலாளர்கள் வந்து செல்வதற்காக இந்த தொழிற்சாலையின் சார்பில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையின் சார்பாகப் பேருந்துகளை இயக்கக்கூடிய பேருந்து ஓட்டுநர்கள் முறையாகச் சாலை விதிளை பின்பற்றாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஈரோடு மாவட்டத்தில் இரட்டைக் கரடு என்ற இடத்தில் நடந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்துக்கு பின்பும் இந்த நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் சாலை விதிகளைப் பின்பற்றாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விபத்துகளை ஏற்படுத்தி வந்த வண்ணம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வரும் நிலையில் நேற்று இரவு மீண்டும் விபத்து நடைபெற்றுள்ளது.
பெருந்துறை அருகே இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி வந்த வாகனமும் அதன் பின்பு வந்த அரசு வாகனமும் அதனைத் தொடர்ந்து வந்த இதே நிறுவனத்தைச் சேர்ந்த வாகனமும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இன்ப்ரா டெக்ஸ் நிறுவனத்தின் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக ஈரோடு பெருந்துறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை நேரம் முடிந்து தொழிலாளர்களை அந்தந்த பகுதியில் உள்ள இடத்திற்குக் கொண்டு செல்லும் போது இந்த நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை மிகவும் வேகமாக இயக்குவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தது.
இந்நிலையில், மாவட்ட காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மீண்டும் பெரிய உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதையும் படிங்க: சாரல் மழையால் விபரீதம்; ஈரோடு அருகே ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு