ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி சாகர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக நத்தை போல் ஊர்ந்து சென்றன. காலை முதல் பனி மூட்டம் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பவானி சாகர் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் மற்றும் மலர் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காலை நேரங்களில் பூக்களைப் பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது.
இதனால் காலை 9 மணி வரை பூ சேகரிக்கும் பணி தடைப்பட்டது. பனிமூட்டம் காரணமாக நீர் பாய்ச்சுதல், களையெடுத்து மற்றும் வாழை, மக்காச்சோளம் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.
சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையான இம்மலைப்பாதை வழியாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக பேருந்து மற்றும் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
அதிகாலை முதல் திம்பம் நிலவி வரும் கடும் பனி மூட்டத்தால் இருமாநில போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.