ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பட்டரமங்கலம் பகுதிநேர நியாய விலைக் கடையில் நேற்று மண்ணெண்ணை வியோகிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் மண்ணெண்ணை வாங்க காத்திருந்தனர். அப்போது நியாய விலைக் கடையின் பெண் ஊழியர் அஸ்மா, அங்குள்ள சிலருக்கு மட்டும் வழங்கிவிட்டு மண்ணெண்ணை தீர்ந்து விட்டதாக கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து கிராம மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையின் பின்புறம் பதுக்கிய வைத்திருந்த 20 லிட்டர் மண்ணெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
இதற்கிடையே திமுக இணைய வழி உறுப்பினர் சேர்க்கைக்கு அங்கு வந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கேசிபி இளங்கோ, பொதுமக்களை சமாதானப்படுத்தினார். இதுகுறித்து சத்தியமங்கலம் கூட்டுறவு சங்க தனி அலுவலர் மோகன்ராஜ் விசாரணை நடத்தியுள்ளார்.
நியாய விலைக் கடையின் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து நியாய விலைக்கடை பின்புறம் பதுக்கிய மண்ணெண்ணையை கைப்பற்றிய தனி அலுவலர் அப்பெண் ஊழியர் அஸ்மாவை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ரேஷன் கடை ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டிய பொதுமக்கள்!