ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணை 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கூடுதுறையில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த தடுப்பணையில் விடுமுறை நாட்களிலும் பண்டிகை தினங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்வார்கள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடனும் கொடிவேரி அணைப்பகுதியில் குவிந்தனர். அங்கு அவர்கள் ஆயில் மசாஜ் செய்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், பலர் தடுப்பணையில் பரிசல் பயணம் மேற்கொண்டனர். கொடிவேரி அணைப் பகுதியில் கடற்கரைபோல் மணல் குவிந்துள்ளதால் குழந்தைகள் அதில் விளையாடி மகிழ்ந்தனர்.
பொதுப்பணித் துறையினர் கொடிவேரியில் குடிநீர், பெண்கள் உடைமாற்றும் அறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் கடத்தூர் காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் நியமிக்கப்படாததால் சத்தியமங்கலம் சாலையிலிருந்து கொடிவேரி அணைக்கு வரும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம்வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்றியும் அணைக்கு செல்ல முடியாமலும் மிகவும் அவதியடைந்தனர்.
இதையும் படிங்க: மாட்டுப் பொங்கல் விழா: 700 பசுக்களுக்கு கோ பூஜை