ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைக்கிராமங்களில் மானாவாரி விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. ஊட்டியில் நிலவும் தட்ப வெப்பநிலை இங்கு காணப்படுவதால் மலை காய்கறி பயிரான காலிஃபிளவர், முட்டைக்கோஸ் சாகுபடி இங்கு செய்யப்படுகிறது.
போதிய மழைப் பொழிவு இல்லாததால் குறைந்த நீரில் சாகுபடி செய்வதற்கு சொட்டுநீர் பாசன முறையை இங்குள்ள விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று மாதப் பயிரான முட்டைக்கோஸ் பயிரை நாற்றாங்கால் முறையில் குழிதட்டுகளில் வளர்க்கின்றனர்.
இந்த குழித்தட்டுகளில் வளர்ந்த பயிரை வாங்கி ஒரு ஏக்கரில் 25 ஆயிரம் பயிர் நடவு செய்து வருகின்றனர். முட்டைக்கோஸூக்கு உழவு, நடவு, களையெடுத்தல், மருந்து, உரமிடுதல் என கிலோவிற்கு மூன்று ரூபாய் வரை செலவாகிறது.
குறுகிய கால பயிரான முட்டைக்கோஸ் தற்போது அறுவடை செய்யப்பட்டு கோவை, மேட்டுப்பாளையம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. தாளவாடி, தொட்டகாசனூர், சூசைபுரம், பனஹள்ளி, தலமலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போது வியாபாரிகள் முகாமிட்டு விவசாயிகளிடம் நேரடியாக முட்டைக்கோஸ் கொள்முதல் செய்கின்றனர்.
கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டைக்கோஸ் தற்போது 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், இந்தாண்டு விவசாயிகளுக்கு முட்டைக்கோஸ் நல்ல லாபம் தந்துள்ளதாக, கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.