ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பகுத்தம்பாளையம் கற்பூரகாடு பகுதியைச் சேர்ந்தவர் கிரண். கூலி தொழிலாளியான இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவியும் நான்கு மாத ஆண் குழந்தையும் இருந்துள்ளனர்.
அக்குழந்தை கடந்த மூன்று தினங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் நேற்று (செப். 22) மாலை பெற்றோர் குழந்தையை சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இதையடுத்து குழந்தையின் உடலை ஒப்படைக்குமாறு பெற்றோர் கேட்டபோது மருத்துவர்கள் பவானிசாகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் இருந்து ஒப்புதல் கடிதம் வாங்கி வருமாறும் தெரிவித்தனர்.
இதையடுத்து பவானிசாகர் காவல் நிலையத்தை அணுகி ஒப்புதல் கடிதம் கேட்டபோது காவல் துறையினர் ஒப்புதல் கடிதம் தர இயலாது என மறுத்துவிட்டதாகவும் இறந்த குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின்பே உடல் ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் அவர்களது உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குழந்தையின் உடலை ஒப்படைக்கக்கோரி பவானிசாகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டு குழந்தை உடலை ஒப்படைப்பதாக காவல்துறையினர் கூறியதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: மதுபோதையில் மனைவியை கொன்றுவிட்டு, கணவன் தூக்கிட்டு தற்கொலை!