வாசல் :
ஈ.வே.ரா. பெரியார், கொடிகாத்த குமரன், கணித மேதை ராமானுஜம் ஆகியோரை ஈன்றெடுத்துள்ள இம்மாவட்டம், தொகுதிகள் மறுசீரமைக்குப் பின்னர், ஒரு மக்களவைத் தொகுதியையும், 8 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிகளில் பவானி சாகர் தனி தொகுதி.
தொகுதிகள் வலம்:
ஈரோடு கிழக்கு: ஒருங்கிணைந்து இருந்த ஈரோடு, கடந்த 2008ஆம் ஆண்டு தொகுதிகள் மறு சீரமைப்புக்குப் பின்னர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒன்று ஈரோடு கிழக்கு. நகரத்திற்குள்ளேயே முடிந்து விடுவதால் தொகுதிக்குள் விவசாயம் இல்லை. ஜவுளித் தொழிலின் மையமாகத் திகழ்கிறது.
இதனாலேயே ஜவுளித் தொழிலின் உப தொழில்களுக்காக, 500 சாயம் ஏற்றும் பிளிச்சிங் ஆலைகள் உள்ளன.
சாயமேற்றும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஈரோடு மேற்கு: தொகுதிகள் மறு சீரமைப்புக்குப் பின்னர் பிரிக்கப்பட்ட மற்றொரு தொகுதி இது. மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியும் கூட. ஈரோடு மாநகராட்சியின் பகுதிகளையும், சுற்று வட்டார கிராமங்களைச் சரிசமமாக இருப்பதால், விவசாயிகள், தொழிலாளர்களை சம விகிதத்தில் கொண்டுள்ளது.
மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், மஞ்சள் சார்ந்த மதிப்புக்கூட்டு தொழில்சாலைகள் அமைக்கப்பட வேண்டும், மஞ்சள்களை சேமிப்பதற்கு குளிர் பதனக்கிடங்கு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் கிணத்தில் போட்ட கல்லாகக் கிடக்கின்றன.
ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக்கப்படும் என அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சித் தொகுதியை தமிழ்நாட்டிற்கு நியாபகப்படுத்திக் கொண்டிருப்பது, கடந்த 1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். அந்தாண்டு தேர்தலில் விவசாயிகளின் பிரச்னையை முன்னிறுத்தி, 1033 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
வாக்குச்சீட்டு அமலில் இருந்த அந்த நேரத்தில், 120 பக்கத்திற்கு வாக்குச்சீட்டு புத்தகம் அச்சிடப்பட்டது. 60 விழுக்காடு விவசாயிகள் வசிக்கும் இந்தத் தொகுதி நிறைவான பாசன வசதி கொண்டுள்ளது. இங்குள்ள விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு விவாசயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் முனைப்பில் இருக்கிறது அரசாங்கம்.
இங்குள்ள 46 புதூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு திறப்பட்ட ஊரகப் பேருந்து நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனை புறநகர் பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பெருந்துறை: கிராமப்புறங்கள் 90 விழுக்காடும், 10 விழுக்காடு நகர்புறத்தையும் கொண்ட தொகுதி பெருந்துறை. வளர்ச்சியற்ற தொகுதியாக இருந்த இத்தொகுதி இங்கு அமைக்கப்பட்டுள்ள சிப்காட்டால் வேகமாக வளர்ந்து வரும் தொகுதியாக மாறியுள்ளது.
கீழ்பவானி பகுதிகளில் நடைபெறும் விவசாயம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியே நடக்கிறது. சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயனற்று போய் இருக்கிறது.
நான்கு வழிச்சாலைகளில் நடக்கும் விபத்துகளால் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நான்கு வழிச்சாலைகளின் பிரதான சாலை சந்திப்பு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும்; விபத்துகளை தடுக்கும் வகையில் அணுகு சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
பவானி: பூலோக ரீதியாகக் காப்புரிமை பெற்றுள்ள புகழ்பெற்ற கைத்தறி பவானி ஜமக்காளம் உற்பத்தி இங்கு தான் நடைபெறுகிறது. பவானி, காவிரி ஆறுகள் சங்கமிக்கும் பவானிகூடுதுறை, பரிகார ஸ்தலமான சங்கேஸ்வரர் ஆலையமும் இத்தொகுதியில் அமைந்துள்ளன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய பரிகார ஸ்தலமாக இது விளங்குகிறது.
விவசாயமும், நெசவும் இத்தொகுதியின் பிரதான தொழிலாக விளங்குகிறது. ஒரு காலத்தில் வீடுகள் தோறும் கைத்தறி நெசவு கூடங்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஜமக்காளம் நெசவு நலிவடைந்துள்ளது.
சாயப்பட்டறை கழிவுகளால் காவிரி ஆறு மாசு அடைகிறது. ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையமும், ஜமக்காளத் தொழில் நுட்பக் கல்லூரியும் இன்னும் கோரிக்கை அளவிலேயே தொடர்கின்றன. பவானி கூடுதுறையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், தொகுதிக்குள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்தியூர்: மலைகளையும், கிராமங்களையும் , சமவெளிகளையும் ஒன்றாக கொண்டது அந்தியூர். கடந்த 2006 வரை தனி தொகுதியாக இருந்த அந்தியூர் பின்னர் பொது தொகுதியாக மாறியது.
இத்தொகுயில் 30 விழுக்காடு மலைப்பகுதிகள்.
இங்குள்ள குருசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு , 4 நாட்கள் நடைபெறும் அந்தியூர் கால்நடைச் சந்தை மிகவும் பிரபலம். தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். அடுத்தபடியாக தறியும், கைத்தொழிலும் நடைபெறுகிறது.
தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயம், குடிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீண்ட கால திட்டங்கள் இல்லாதது பெருங்குறையாகத் தொடர்கிறது. மனித-காட்டுயிர் பிரச்னைகளுக்கு தீர்வு இல்லாததும், தொகுதியில், புதிய தொழில் வாய்ப்புகள் இல்லாததும் பெருஞ்சோகமே...
கோபிச்செட்டிபாளையம்: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, கீழ்பவானி வாய்க்காலின் நேரடி பாசனம் மூலம் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்படுவதன் மூலம் வளமான தொகுதியாகவே இருக்கிறது கோபி.
இங்குள்ள மொடச்சூர் பகுதியில் இருந்து தொடங்கும் கீரிப்பள்ளம் ஓடையில் ஒரு காலத்தில் தெளிவான நீரோடியிருக்கிறது.
தற்போது நகர்ப்புற கழிவுநீர் கலந்து, சாக்கடையாக மாறியுள்ள இந்த ஓடை, தடப்பள்ளி வாய்க்காலில் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கழிவுநீரை சுத்திகரித்தப் பின்னரே, வாய்க்காலில் கலப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.
நகராட்சி பகுதியில் கரட்டூரில் உள்ள குப்பைக் கிடங்கை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய கல்வி அமைச்சரின் தொகுதியான கோபியிலுள்ள விளாங்கோம்பை கிராமத்தில் ஓர் உண்டு உறைவிடப்பள்ளி தொடங்கப்பட வேண்டும்.
பவானிசாகர் (தனி): ஈரோடு மாவட்ட பாசனத்தின் இதயமான பவானிசாகர் அணை, பல்லுயிர் சூழலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி அம்மன் கோயில் உள்ள தொகுதி பவானிசாகர். கடந்த 2011 ஆண்டுக்கு முன்பு வரை இரண்டு தொகுதிகளாக இருந்த சத்தியமங்கலம், பவானி, தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர், பவானிசாகர் என்ற பெயரில் இணைக்கப்பட்டு தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.
தொகுதியில் மூன்றில் இரண்டு பங்கு மலை கிராமங்களே. தமிழ்நாடு-கர்நாடக எல்லைகளின் பாலமாகவும் இருக்கிறது பவானிசாகர். இங்கு விவசாயமே பிரதான தொழில். தாளவாடி, கடம்பூர், கேர்மாளம் பகுதிகளில் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, மலைக்காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
பவானி பகுதியில் வாழை, மல்லிகை பூ வகைகள் அதிகம் பயிரிடப்படுகின்றன. மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததது, பவானி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுதல், இங்குள்ள மலைவாழ் மக்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதனால் அம்மக்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதில் தடைகள் உள்ளன. பவானியில் நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் ஆலை, விளைப் பொருட்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு என்பன தொகுதிகளின் தேவைப் பட்டியலாக உள்ளன.
களநிலவரம்:
மாவட்டத்தின் நிலவும் போக்குவரத்து நெரிசல், நலிவடைந்து வரும் பவானி ஜமக்காளத் கைத்தறித் தொழில், மலைவாழ் மக்களுக்கான பிரச்னை, சில தொகுதிகளில் தொழில் வாய்ப்புகள் இல்லாதது, அதிகரித்து வரும் மனித- காட்டுயிர் மோதல்களுக்குத் தீர்வு என சரிசெய்ய வேண்டிய பிரச்னைகள் பல உள்ளன.
மாவட்டத்தின் எட்டு தொகுதிளிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்திலிருந்து இரண்டு பேர் அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சர்கள் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் சமபலத்திலேயே இருக்கின்றன.
கடந்த தேர்தலில் எதிர் அணியில் இருந்து வெற்றி பெற்ற சில கட்சிகள், தற்போது தங்களின் கூட்டணியில் இருப்பதால், அது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வலு சேர்க்கவே செய்யும். கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் குறிப்பிட்ட அளவில் இளம் வாக்களர்கள். இளம் வாக்காளர்களை குறி வைத்து, மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் களம் இறங்கும் பட்சத்தில், அவை திமுக, அதிமுக வாக்கு விகிதத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்.
நொடிக்கு நொடி மாறும் கள நிலவரத்தில், கடந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருந்தாலும், தற்போது அதனைத் தக்கவைத்துக் கொள்ள அதிமுக போராட வேண்டும். பந்தயத்தில் எதிர்கட்சி ஒரு நூலிழை முன்னணியில் இருக்கிறது.