கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள ராமகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் ராமலிங்கம் என்பவர், ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கரூர் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (எ) தியாகராஜன் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும், அதனை வாங்கி வைத்துக் கொண்டால் செல்வச் செழிப்போடு வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வார்த்தைகளை நம்பி கடந்த 5ஆம் தேதி அந்தியூர் பேருந்து நிலையத்தில் வைத்து தியாகராஜனிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அதனைப் பெற்றுக் கொண்ட பின்னர் மேலும் பணம் வேண்டும் என அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறை அடுத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் இரிடியம் கும்பல் அந்தியூர் அருகே உள்ள குருநாத சுவாமி கோயில் வனப்பகுதியில் சுற்றித் திரிவதை உறுதி செய்த பின்னர், மோசடி கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் ரொக்கப்பணம், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய பித்தளைக் குடமும், மெட்டல் டிடெக்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்செங்கோடு செந்தில்ராஜா (45), பிரசாந்த் (23), திருச்சி சேட்டு (36), கரூர் காசிநாதன்துரை (49), ஈரோடு மதன்ஃபெர்னாண்டஸ் (34), சுரேஷ் (38) என தெரிய வந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் காவல் துறையினர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாகவுள்ள இரிடியம் மோசடி கும்பலின் தலைவன் தியாகராஜனை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: