ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கிட்டான்(55). விவசாய கூலித்தொழிலாளியான இவர், தனது மனைவி அருக்காணியுடன் அருகே உள்ள வனப்பகுதிக்கு விறகு பொறுக்குவதற்காக சென்றுள்ளார். வன எல்லையிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் உள்ளே அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை வெங்கிட்டான், அருக்காணி இருவரை கண்டதும் ஆத்திரத்துடன் துரத்தியது.
இதில் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக தலைதெறிக்க ஓடினர். இதில் வெங்கிட்டானை துரத்திப்பிடித்த யானை தும்பிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட அருக்காணி உடனடியாக அக்கம்பக்கம் உள்ள பொதுமக்களிடம் இத்தகவலை தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகர் வனத்துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை மிதித்து உயிரிழந்த வெங்கிட்டான் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதிக்குள் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: