ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அருகே வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. கர்நாடக மாநிலத்திலிருந்து அதிக பாரத்துடன் கரும்புகளை ஏற்றி வரும் லாரிகளிலிருந்து கரும்புகள் சாலையோரப் பகுதிகளில் கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. அந்தக் கரும்புகளை சாப்பிடுவதற்காக வனத்தில் இருந்து யானைகள் வெளியேறுகின்றன.
கரும்புகளை தின்று பழகிய யானைகள், சில சமயங்களில் கரும்பு பாரத்தை ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து உட்கொள்ளும் நிகழ்வுகளும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் ஒற்றை யானை ஒன்று பண்ணாரி சோதனைச் சாவடி அருகே இன்று (அக்டோபர் 18) அதிகாலை வந்தது. அங்கு லாரிகளின் அதிக உயரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட தடுப்புக்கம்பி அருகே நின்று கொண்டு, அவ்வழியாக வரும் வாகனங்களை திடீரென துரத்தியது.
இதனைக் கண்டு அச்சமுற்ற வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களைச் சோதனைச் சாவடியிலிருந்து சற்று தூரத்திலேயே நிறுத்தினர். மேலும், யானை தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரிகளும் வரிசையான நின்றன.
வனத்திலிருந்து வெளிவந்து சாலையை மறித்து வாகனத்தை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானை, சுமார் ஒரு மணி நேரம் வரை எங்கும் நகராமல் அதே இடத்தில் நின்றதால் 1 மணி நேரம் வரை போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்து பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை அங்கிருந்து விரட்டினர்.
இதையும் படிங்க: வாழ்க்கை வாழ்வதற்கே... தனக்கு தானே இறுதி அஞ்சலி எழுதிய நபர்!