ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் விஜயலட்சுமியும் திமுக 3ஆவது வார்டு உறுப்பினர் ஆசிர்வாதமும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் அலுவலர் பொன்னம்பலநாதன் அறிவித்தார்.
திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏழு பேர் உள்ள நிலையில், அதிமுகவினர் மூன்று பேர் மட்டுமே இருந்தபோது அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமி ஆறு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதை ஏற்கமுடியாது என்று கூறி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி தூக்கநாயக்கன்பாளையம் அண்ணாசிலை முன்பு திமுகவினர் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஜனவரி மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த நடராஜ் என்பவர் திமுகவினரை வாக்களிக்க விடாமல் தடுத்ததுடன் 9ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினரான திமுகவைச்சேர்ந்த பூமா விஜயலட்சுமி என்பவரைத் தாக்கியதாகவும் வாக்குப் பெட்டியை அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜ் தூக்கிச்சென்றதாகவும் கூறி திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏழு பேரும் ஒன்றிய அலுவலகத்திற்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவேண்டும் என்றும், தகராறில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர். அதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் இந்திராதேவி தேர்தலை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணே தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதூப்புடன் தேர்தல் நடத்த ஆயத்தமாகியிருந்தனர்.
இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த மூன்று ஒன்றியக்குழு உறுப்பினர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்துவிட்டனர். ஆனால் திமுகவைச் சேர்ந்த ஏழு ஒன்றியக்குழு உறுப்பினர்களும் வாக்குப்பதிவு மையத்திற்கு வராத காரணத்தால் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னம்பலநாதன் அறிவித்தார்.
இதனையடுத்து நேற்று மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பத்து பேரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், திமுக சார்பில் 3ஆவது வார்டு உறுப்பினர் ஆர்சிர்வாதமும் அதிமுக சார்பில் 10ஆவது வார்டு உறுப்பினர் விஜயலட்சுமியும் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர். தேர்தல் ஆன்லைன் வீடியோ பதிவுடன் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றபோது அதிமுகவைச் சேர்ந்த வியஜலட்சுமி வெற்றிபெற்றதாக தேர்தல் அலுவலர் பொன்னம்பலநாதன் அறிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாங்கள் ஏழு பேரும் ஒன்றாக உள்ள நிலையில், மூன்று பேர் மட்டுமே உள்ள அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது தேர்தலில் முறைகேடு நடத்துள்ளதைக் காட்டுவதாக தெரிவித்தனர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி தூக்கநாயக்கன்பாளையம் அண்ணாசிலை முன்பு திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தியூர் சத்தியமங்கலம் சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினர் கலைந்து போகச்சொல்லி வலியுறுத்தினர். அதனால் திமுகவினர் அண்ணாசிலை முன்பு நியாயம் கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாகக்கூறி உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்து முறைகேட்டிற்கு உடந்தையாக அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் செயல்பட்டதாகவும் அவர்கள் இருவரையும் தொகுதிக்குள் விடாமல் தடுக்கப்போவதாகும் அறிவித்துள்ளனர்.