தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களின் எல்லைகளில் பயணிக்கும் வாகனங்கள் தாளவாடி, ஆசனூர், திம்பம் ஆகிய ஊர்களின் வழியாகப் பயணிக்கின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான கர்நாடகப் பயணிகள் தமிழ்நாடு வந்து செல்வதால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு மாநில எல்லையான பண்ணாரி சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. கர்நாடகத்திலிருந்த வந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளிடம் கை கழுவுதல், முகக்கசவம் அணிதல் போன்றவை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. சுகாதாரப் பணியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பண்ணாரி சோதனைச் சாவடியில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு வரும் கர்நாடகப் பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின், கரோனா அறிகுறியுடன் தென்பட்டால் தாளவாடியில் தனி வார்டு அமைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள். முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலைக்குக் கேட்டுள்ளோம். முகக்கவசவம் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: உணவு விடுதிகளில் ஆய்வு