ஈரோடு: மாநகராட்சியில் உள்ள திட்டப்பணிகளை அவுட் சோர்சிங் முறை மூலம் தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை கண்டிக்கும் விதமாக, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மூன்றாவது நாளாக இன்று (நவ.2) காத்திருப்பு போட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்தில் உள்ள 60 வார்டுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கடத்த 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், பில் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவுட்சேர்சிங் மூலம் இனி பணிகள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணை மூலம் தங்களது பணிகள் பாதிக்கப்படும் எனக் கூறி, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டிரைவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை மூன்றாவது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலகம் வந்த மேயர் நாகரத்தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது தங்களது கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாகவும் போராட்டத்தை கைவிட முடியுமா முடியாதா என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக நேற்று தூய்மைப் தொழிலாளர் மோகன்ராஜ் என்பவர் மாநகராட்சி அலுவலக கட்டடம் மீது ஏறி, தற்கொலைக்கு முயன்றபோது அவரை சக ஊழியர்கள் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கார் ஓட்டியவருக்கு ஹெல்மெட் இல்லை' என அபராதம் வசூலித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் ஃபைன்!