ஈரோடு: தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை விளங்கி வருகிறது. இந்த கால்நடைச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று கூடுகிறது. இங்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதனை வாங்கிச்செல்கின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமையான இன்று புஞ்சை புளியம்பட்டி கால்நடைச்சந்தைக்கு 60 எருமைகள், 300 கலப்பின மாடுகள், 350 ஜெர்சி மாடுகள், 80 வளர்ப்புக்கன்றுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரும் வந்திருந்தனர். இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், கால்நடைகளின் தீவன பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், சந்தையில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. இதில், எருமைகள் 16,000 ரூபாய் முதல் 36,000 ரூபாய் வரையிலும், கறுப்பு வெள்ளை மாடு 22,000 ரூபாய் முதல் 48,000 ரூபாய் வரையிலும், ஜெர்சி மாடுகள் 23,000 ரூபாய் முதல் 53,000 ரூபாய் வரையிலும், சிந்து மாடுகள் 15,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், நாட்டுமாடு 40,000 ரூபாய் முதல் 74,000 ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் 6,000 ரூபாய் முதல், 14,000 ரூபாய் வரையிலும், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் 5,000 ரூபாய் முதல் 22,000 ரூபாய் வரையிலும் விற்பனையானது. கடந்த சித்திரை மாதத்தில் மாடு விற்பனை மந்தமான நிலையில், வைகாசி மாதம் தொடங்கி மழை பெய்துள்ளதால் கால்நடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “பரவலாக மழை பெய்துள்ளதால் இன்னும் ஆறு மாதத்திற்கு தீவனத்திற்கு பிரச்னை இருக்காது. இதனால் ஆடு, மாடுகளை விவசாயிகள் ஆர்வமாக வாங்கிச்செல்கின்றனர். கடந்த வாரத்தை விட, இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளது. சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூபாய் 2 கோடிக்கு விற்பனையாகியுள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு- பொதுமக்கள் கவலை!