ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தட்டபள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலமாக 24,500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு தோறும் இரு போக பாசன வசதி பெற்று வருகிறது. கடை மடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவாசாயிகள் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர்.இதைத்தொடர்ந்து கடந்தாண்டு 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு வாய்க்கால்களும் சீரமைப்பு பணிகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல், கான்கிரீட் சுவர் அமைத்தல், படித்துறை அமைத்தல், பழுதடைந்த இரும்பு சட்டர்களை(தடுப்பு) மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கின.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் பாசனத்திற்காக இரு வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் பராமரிப்பு பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனிடையே வாய்க்கால் கரையோரமாகவே சுமார் 500 ஏக்கரில் விளையும், நெல், வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு சென்று வருவதால் கரைகள் சேதமடைந்தன.
இதனால் அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் முறையிட்டனர். அதனடிப்படையில் கரையோரமாக தார் சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்காலை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பொது விநியோக பொருள்கள் கடத்தலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!