ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருமகன் ஈவேராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதேபோல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவப்பிரசாத், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் ஆனந்த், ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால் யார் வேட்பாளர் என்பதில் இழுபறி நீடித்தது. சின்னம் தொடர்பான வழக்கு தீர்ப்பு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில் மேலும் குழப்பமான சூழ்நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்கும் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரண்டு தரப்பினரும் பாரதிய ஜனதா கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கூறி இருந்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்களுடன் நடைபெற்ற பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் நேற்று ரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வமும் நேற்று செந்தில் முருகன் என்பவரை தனது அணிக்கான வேட்பாளராக அறிவித்தார். அதன் பின்னரும் பாஜக தனது ஆதரவு யாருக்கு என்ற நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தது.
பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணியில் இருந்தபோது இதே கூட்டணியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை இந்த கூட்டணியின் வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வி அடைந்த நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார்.
அதிமுகவில் சின்னம் தொடர்பான பிரச்சனை மற்றும் பொதுக்குழு தொடர்பான பிரச்சனைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில் பாஜக தங்களது ஆதரவு யாருக்கு என்பது இதுவரையிலும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவின் போது வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த தேர்தல் பணிமனை கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்பதை தவறுதலாக அச்சிட்டு, முற்போக்கு தேசிய கூட்டணி என்று வைத்ததாக சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முற்போக்கு என்கின்ற எழுத்தை மறைத்திருந்தனர். பாரதி ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, ’ஆறு மணி நேரத்தில் மாற்றி இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தேர்தல் பணிமனையில் இரவோடு இரவாக பேனரை மாற்றி உள்ளனர். இந்த பேனரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி என வைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக மாற்றப்பட்ட இந்த பேனர் எடப்பாடி பழனிசாமிக்கு பாரதிய ஜனதா ஆதரவு இல்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளது.
மேலும் ஓபிஎஸ், பாரதிய ஜனதா கட்சியிடம் நெருக்கமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் பாரதிய ஜனதா எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவு தெரிவிக்காமல், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது பாரதிய ஜனதா ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருக்கும் டாட்டா காட்டியதாகத் தெரிகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தென்காசி காதல் திருமண விவகாரம் - கணவர் பரபரப்பு வாக்குமூலம்