ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், சிறுவர் ரயில், கொலம்பஸ், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பூங்காவை பார்வையிட தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுற்றுலாத் தலங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்பேரில் விதிமுறைகளுக்கு உட்பட்டு டிசம்பர் 14ஆம் தேதி முதல் பவானிசாகர் அணை பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் பூங்காவை சுத்தம் செய்து இன்று (டிச.14) காலை பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
முன்னதாக சுற்றுலாப் பயணிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்ட பின்னர் பூங்காவிற்குள் நுழையுமாறு பொதுப்பணித் துறை ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பூங்கா நுழைவு வாயிலில் நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடத்தில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விதிமுறைகள் குறித்த பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.14) காலை பூங்கா திறக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு பூங்காவிற்கு சென்றனர். காலை நேரம் என்பதால் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். மாலை நேரங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி ஒற்றைக்காலில் நொண்டியடிக்கும் போராட்டம்!