ஈரோடு மாவட்டம், முள்ளாம்பரப்பு பேருந்து நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர், புனிதவதி. இவரது கணவர் ரவிச்சந்திரன். கடந்த 2018ஆம் ஆண்டு கஸ்பாபேட்டை கனரா வங்கியில் பயிர்க்கடனுக்காக, தனது மனைவி புனிதவதியின் 139 கிராம் எடையுள்ள கைக்கு இடும் நகை, விரல் மோதிரம், வளையல் உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து, முதல் முறையாக 40 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது முறையாக 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ரவிச்சந்திரன் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். ரவிச்சந்திரன் - புனிதவதி தம்பதிக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் வங்கியில் கணவர் முதல் முறையாக பெற்ற 40 ஆயிரம் ரூபாய்க்கு வட்டியுடன் 41 ஆயிரத்து 699 ரூபாயும் இரண்டாம் முறையாக பெற்ற 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும் புனிதவதி அடைத்துள்ளார்.
பின்னர் அவரது நகையைத் திரும்ப வாங்குவதற்கு வங்கி நிர்வாகம் கூறியபடி, கணவரின் இறப்புச் சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ; கடந்த ஆண்டு முதல் மூன்று முறை வங்கி நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், ஒவ்வொரு முறையும் வங்கி நிர்வாகத்தினர் ஏதாவது ஒரு காரணம் சொல்லி புனிதவதியிடம் நகையைத் திருப்பிக் கொடுக்காமல் வந்துள்ளனர். இதனையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள கனரா வங்கியின் மாவட்ட தலைமை அலுவலகம், சென்னையில் உள்ள கனரா வங்கியின் தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இந்தப் புகாருக்கு பதில் அனுப்பிய வங்கித் தலைமை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது. மீண்டும் வங்கிக்குச் சென்ற புனிதவதியிடம் அதன் நிர்வாகத்தினர் வங்கி இணைப்பு காரணமாக, பல்வேறு விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அடமானம் வைத்த நகையை முன்பே பெற்றுக் கொண்டதாக பத்திரம் எழுதி கொடுக்கும்படி கூறியுள்ளனர்.
அப்படி எழுதி கொடுத்த பின்பு நான்கு நாட்களில் நகையை வழங்குவதாகக் கூறியுள்ளனர். இதற்கு மறுப்புத் தெரிவித்த புதனிதவதி நகையைப் பெற்று கொள்ளாமல், பெற்றுக்கொண்டதாக எழுத்துப் பூர்வமாக வழங்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால், இப்படி எழுதி கொடுத்தால் மட்டுமே நகையை வழங்க முடியும் என்று வங்கி நிர்வாகிகள் மீண்டும் தெரிவித்துள்ளனர்.
கணவர் பெற்ற கடனை அடைக்க வேறு ஒருவரிடம், வட்டிக்குப் பணம் வாங்கி வங்கியில் செலுத்திய புனிதவதி, வேறு வழியில்லாமல் நிஜத்தில் நகையை வாங்காமல், எழுத்துப் பூர்வமாக வாங்கியதாக எழுதி கொடுத்துள்ளார். ஆனால், வங்கி நிர்வாகத்தினர் நகையை இதுவரையில் வழங்காமல் தன்னை ஏமாற்றி வருவதாகவும், கணவர் உயிரிழந்ததால் வருமானம் இல்லாமல் தனியாக தவிப்பதாகவும் புனிதவதி கண்ணீர் மல்கப் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனரா வங்கி நிர்வாகத்திடம் கேட்டபோது, "வங்கிகள் இணைப்புக்குப் பின்பு, அதன் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புனிதவதியின் ஆணவங்கள் வங்கியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய அனுமதி வந்தவுடன், அவரிடம் தங்க நகையை ஒப்படைத்து விடுவோம்" என்று கூறினர்.
இதையும் படிங்க: கூட்டுறவு வங்கிகள் தனியார்மயமாக்கலைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!