ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் மலைக்கிராம மக்களுக்கு அதிமுக சார்பில், 2000 பேருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மலைக்கிராம மக்களுக்கு அரிசி வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மலைக் கிராமங்கள் உட்பட அனைத்து பகுதியிலுள்ள மாணவர்களையும் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று தேர்வு முடிந்ததும் மீண்டும் அவர்கள் இருப்பிடத்திற்கு கொண்டு சென்றுவிட பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் வசதிக்காக, கல்வி தொலைக்காட்சி யூடிப் மூலம் கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிப் போட வேண்டும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்ற கேட்ட கேள்விக்கு, தேர்வு நடத்தாமல் இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என, பதில் கூறினார்.
இதையும் படிங்க: என்எல்சி தீ விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு!