தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பவானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளான பவானி நகராட்சி, ஆண்டிகுளம், குருப்பநாயக்கன்பாளையம், வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, மைலம்பாடி, தொட்டிபாளையம் பகுதிகளில் நேரடியாக பெறப்பட்ட மனுக்களில் தகுதியுள்ள மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா பவானியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சுசூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு, 3 ஆயிரத்து 125 பயனாளிகளுக்கு, 13 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் உணவுப் பொருட்கள் பேக்கிங் செய்யும் பைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலர்கள் வணிக நிறுவனங்களில் சோதனை என்கிற பெயரில் அவற்றை பறிமுதல் செய்தாலோ, அபராதம் விதித்தாலோ வர்த்தகர்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என்றும் அவ்வாறு கொடுக்கும் புகார்களை கருத்தில் கொண்டு அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் திமுக எடுத்து வரும் முயற்சிகள் எதுவும் பலிக்காது என்றும் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி அங்குள்ள தமிழர்கள் கொல்ல காரணமாக இருந்தார்கள். தற்போது திமுக இலங்கைத் தமிழர்கள் குறித்து கவலைப்படுவது ஏன் என்றும், வைகோ மற்றும் திருமாளவளவன் போன்றவர்கள் இலங்கையை வைத்துதான் அரசியல் செய்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதன்முறையாக சிறுநீரக குழாய் அடைப்பு சிகிச்சை : திருச்சி அரசு மருத்துவமனை சாதனை!