ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் அடுத்த கேர்மாளம் சாலை வைத்தியநாதபுரம் பிரிவு அருகே நவம்பர் 29ஆம் தேதி 49 வயதுள்ள ஆண் தலையில் கல்லைப்போட்டு கொலையுண்டு கிடப்பதாக சுஜில்கரை மக்கள் கடம்பூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர். பின்னர், கடம்பூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாதன் (55) என்பது தெரியவந்தது.
பர்கூர் மலைப்பகுதி, கர்நாடக மாநிலம் சூலக்கொம்பை பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் சேர்ந்து மாதனை கொலை செய்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.
கொலையில் தொடர்புடைய கொங்காடை கிராமத்தைச் சேர்ந்த மொண்டி சித்தன் (56), சித்தலிங்கம் (30), ரங்கன் (55), நாகதம்படி (45), கணேஷ் தம்படி (30), முருகதம்படி (38), கர்நாடக மாநிலம் ஹனூர் தாலுகா சூலக்கொம்பை கிராமத்தைச் சேர்ந்த மாதேவா (40), சித்தன் (29) ஆகியோரைக் கடம்பூர் காவல் துறையினர் கைதுசெய்து ஈரோடு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொலையாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின்படி, "கொங்காடையைச் சேர்ந்த நாகதம்படி, கணேஷ்தம்படி, முருகதம்படி ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை மாதன் குத்தகைக்கு வேளாண்மை செய்துவந்தார். நீண்ட நாள்களாக குத்தகைக்கு வேளாண்மை செய்வதால் நிலம் தனக்குச் சொந்தம் என மாதன் உரிமை கொண்டாடியதால் இப்பிரச்சனை நீதிமன்றத்துக்குச் சென்றது.
இந்த வழக்கில் மாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி மாதன் வேளாண்மை நிலத்தை காலிசெய்யாமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நாகதம்படி தரப்பினர் மாதனை கொலைசெய்ய திட்டம் தீட்டினர்.
அதன்படி, கொங்காடையைச் சேர்ந்த மொண்டிசித்தன், அவரது மகன் சித்தலிங்கம், மாதேவா சித்தன், ரங்கன், ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து செலவுத் தொகையாக ரூ.25 ஆயிரம் என மொத்தம் 1.50 லட்சம் பணம் கொடுத்து மாதனைக் கொலைசெய்தனர்" என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வு ஒத்திவைப்பு!