தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் கடந்த சில மாதங்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் விலையில்லா பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கரோனா ஊரடங்கு காலத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசிகள் தரமற்றதாக இருப்பதாக கூறி ஈரோடு மாவட்ட நியாய விலைக் கடைகள் முன்பாக அரிசிகளைக் கொட்டிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாக தஞ்சாவூர், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட வேளாண் மாவட்டங்களிலிருந்து விளைவிக்கப்படும் நெல் மூட்டைகள் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் தேவைக்கு ஏற்றாற்போல் அரவை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரிசி ஆக்கப்பட்டு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த மாதங்களுக்கு நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கான நெல் மூட்டைகள் திருவாரூரிலிருந்து சரக்கு ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
42 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் கொண்டு வரப்பட்ட இரண்டாயிரம் டன் நெல் மூட்டைகளை 50க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள், 30க்கும் மேற்பட்ட லாரிகளில் இறக்கி அடுக்கி வைத்தனர். லாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகளும் பாதுகாப்புடன் ஈரோடு மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையும் படிங்க: தொடர் கனமழையால் பாதிக்கப்படும் நெல்: கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்