திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, பழனி, நத்தம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வந்திருந்த அலுவலர்களுக்கு வழக்கம்போல பலகாரங்கள் வழங்கப்பட்டன. அதனுடன் சேர்த்து நூற்றுக்கும் அதிகமான பிஸ்லரி வாட்டர் பாட்டில்கள் தரப்பட்டன. மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசித்த ஆலோசனை கூட்டத்தில் தட்டுப்பாடு இன்றி தனியார் நிறுவன குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இதில் வழங்கப்பட்ட தனியார் குடிநீர் பாட்டில்களில் இருந்த தண்ணீரை பலர் மீதம் வைத்து சென்றனர்.
ஒரு புறம் மக்கள் குடிநீரின்றி, ஒரு குடம் நீர் 12 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கும் நிலையில், அலுவலர்களுக்கு தாராளமாக தண்ணீர் பாட்டில்களை விநியோகிக்கின்றனர். இந்த கூட்டத்தில் வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பேசிய திமுகவினருக்கு தனியார் நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி எப்படி தண்ணீர் கிடைக்கிறது என்று கேள்வி எழுப்பத் தோன்றவில்லை. மேலும், தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் இந்தக் காலகட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த திட்டமிடல் ஏதுமின்றி, அரசு நிகழ்ச்சியிலேயே தண்ணீர் வீணடிக்கப்படுவது அரசின் பொறுப்பற்றதன்மைக்கு உகந்த சான்றாகும்.