திண்டுக்கல்: நத்தத்திலிருந்து துவரங்குறிச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால், சேர்வீடு கிராமத்தைச் சேர்ந்தவர்களும், சுற்றுவட்டாரப் பகுதியினரும் பள்ளிக்கூடம், மருத்துவமனை, மயான பகுதிகள் அனைத்திற்கும் நான்கு வழிச் சாலையைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
இதனால், கிராம மக்களின் பாதுகாப்பைக் கருதி சேர் வீடு, சுற்று வட்டார கிராம மக்களின் போக்குவரத்தில் பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். எனவே அதற்கு தகுந்த முறையில் மேம்பாலம், அணுகு சாலைகள் அமைத்துத் தர வேண்டும். மேலும் பாலத்தின் கீழ் மழை நீர் தேங்காத வகையிலும், விவசாய விளைநிலங்களைப் பாதிக்காத வகையிலும், நீர் வடிகால்கள் அமைத்து நீர்நிலைகளில் கொண்டுபோய் விட வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த நத்தம் காவல் ஆய்வாளர் ராஜ முரளி, வேலம்பட்டி விஏஓ சுரேந்திரன், நிகாய் சார்பில் திட்ட மேலாளர் உடையப்பன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று, கிராம மக்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நத்தம் தாலுகா அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பிரச்சினை குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் எனக் கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்