திண்டுக்கல்: பழனி அருகே ராமநாதன் நகர் பைபாஸ் சாலையில் சொகுசு காரில் வந்த கும்பல் அப்பகுதியில் நடந்துசென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இதற்கிடையே பழைய தாராபுரம் சாலையில் தாறுமாறாக மின்னல் வேகத்தில் கார் ஒன்று செல்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில் உடனடியாக கீரனூர் காவல்துறையினர் மேல்கரைப்பட்டி பகுதியில் செல்லும் வாகனங்களை நிறுத்திச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் காவல்துறையினரைக் கண்டதும், அந்த கார் அருகிலிருந்த வயல்வெளியில் சென்றது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது காரை நிறுத்திவிட்டு, காரிலிருந்தவர்கள் தப்பிச் ஓடிவிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் காரை பார்வையிட்டபோது, அதில் பதிவு எண் எதுவும் இல்லை. அதன் பின் காவல்துறையினர் காரை கைப்பற்றினர்.
இதற்கிடையே நாச்சியப்பகவுண்டன் வலசு பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரைப் பிடித்து விசாரணை செய்ததில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் தான் பெண்ணிடம் செயின் பறித்து தப்பி சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் பறித்த நகை கவரிங் நகை என்பதால் அதைச் சாலையில் வீசியதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கழக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கோதா; அதிமுக தொண்டருக்கு தர்ம அடி கொடுத்த ரத்தத்தின் ரத்தங்கள்!