திண்டுக்கல் பழனி அடிவாரம் இடும்பன் கோயில் ரோட்டில் தங்கவேலு - தங்கப்பொண்ணு என்ற தம்பதி வசித்து வருகின்றனர். தங்கப்பொண்ணு தனது வீட்டின் அருகே உள்ள கடையில் மளிகை பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், கடையில் பொருட்களை வாங்குவது போல அந்தப் பெண்ணின் அருகில் சென்று நோட்டமிட்டுள்ளான்.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறித்த அந்த இளைஞன், அவரையும் கீழே தள்ளி விட்டுத் தப்பி ஓடியுள்ளான். இதனை சற்றும் எதிர்பார்க்காத தங்கப்பொண்ணு உடனடியாக எழுந்து கூச்சலிட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தப்ப முயன்ற திருடர்களை விரட்டியுள்ளனர்.
கடைக்கு அருகிலே இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த மற்றொரு இளைஞருடன் நகையைப் பறித்துக்கொண்டு ஓடி வந்த நபர் தப்பிச் சென்றுள்ளான். இதுதொடர்பாக பழனி நகர காவல் நிலையத்தில் தங்கப்பொண்ணு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவான காட்சிகளை வைத்து நகையை பறித்துச் சென்றவர்களை காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த தனபாண்டி, விக்னேஷ் மற்றும் சிவகிரிபட்டியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 3 சவரன் தங்க நகை, குற்றத்திற்கு பயன்படுத்திய ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த இருசக்கர வாகனம் மதுரை அவனியாபுரத்தில் திருடப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மூன்று பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வாடிக்கையாளர் போல் நடிப்பைப்போட்டு செல்போன் திருடிய நபர் - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை