திண்டுக்கல்: பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது, சித்தரேவு கிராமம். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த உச்சி காளியம்மன் கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், உள்ளூர் நிர்வாகப் பிரச்சனை காரணமாக கோயில் பராமரிப்பின்றி பூட்டப்பட்டதை தொடர்ந்து கோயில் சிதிலமடைந்தது.
இதனையடுத்து சிதிலமடைந்த கோயிலை, ஒருதரப்பினர் சேர்ந்து புனரமைத்து கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தினர். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட கோயிலில் பட்டியலின மக்களை உள்ளே விட மறுப்பதாக குற்றம்சாட்டி, மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் சித்தரேவு கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியல் இன மக்கள் உள்ளே சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று உயர் நீதிமன்றக்கிளையின் உத்தரவுப்படி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையறிந்த மற்றொரு பிரிவைச்சேர்ந்த பெண்கள் கோயில் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாங்கள் வரி செலுத்தி கட்டிய கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும், இன்று கோயிலுக்குள் அனுமதித்து சாமி தரிசனம் செய்ய சம்மதிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்யலாம் என்பது குறித்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் சமரசம் செய்தனர்.
இதையடுத்து அனைவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கோட்டாட்சியர் சிவக்குமார் கோயிலைத் திறக்க, போலீசார் பாதுகாப்புடன் பட்டியல் இன மக்கள் அனைவரும் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஒருபிரிவினரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து கோயில் முன்பு பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்... கஞ்சா வியாபாரி கைது