திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கோட்டையூர் சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர், ராமகிருஷ்ணன். இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேசியர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு மூன்று மகள்களும் ஹரிஹர தீபன் (6) என்ற ஒரு மகனும் உள்ளனர். நேற்று (நவம்பர் 7) ராமகிருஷ்ணன் வெளியூர் சென்றார். விளையாட சென்ற ஹரிஹர தீபன் நீண்ட நேரமாக வீட்டுக்கு வரவில்லை என அவரது தாய் ஊர் முழுவதும் தேடி உள்ளார்.
அப்பொழுது அருகில் இருந்த உறவினர் வீட்டு மாடிக்குச் சென்று பார்த்தபோது மகன் ஹரிஹர தீபன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து கதறி அழுதார்.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நத்தம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றினர்.
பின் உடற்கூராய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரடியாக சென்று விசாரணை செய்தார். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து காவல் துறையினர் இந்தக் கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த ஹரிஹர தீபனின் பெரியப்பா மகன் அஜய் ரத்தினம் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் வந்தது.
அஜய் ரத்தினம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஜய் ரத்தினம் சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் அவரிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அஜய் ரத்தினம் சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சிறுவனின் அக்காவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவதூறாகப் பரப்பியுள்ளார்.
இதுகுறித்து அஜய் ரத்தினத்தின் மீது காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர். அதையடுத்து அஜய் ரத்தினத்தின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வழக்கை வாபாஸ் பெற்றனர். ஆகவே காவலர்கள் அஜய் ரத்தினத்தை எச்சரித்து அனுப்பினர்.
இதனால் ராமகிருஷ்ணன் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்துடன் அஜய் ரத்தினம் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிஹர தீபனை அஜய்ரத்தினம் கொய்யாப்பழம் வாங்கித் தருவதாக கூறி, அருகில் உள்ள உறவினர் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து ஹரிஹர தீபனின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு வாயில் துணியை வைத்து, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்பு எதுவும் தெரியாததுபோல் அங்கிருந்து சென்று விட்டார் என விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கொலை செய்த அஜய் ரத்தினத்தை கைது செய்த காவல் துறையினர், மேலும் இக்கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போதையில் நண்பர் கழுத்தறுத்து கொலை - இளைஞர் கைது