திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரம் கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான தார் கலவை தொழிற்சாலை ஒன்று கடந்த 5 ஆண்டுகளாக இதேபகுதியில் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து வரும் நச்சுப்புகையால் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறலால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பல்வேறு அரசு அலுவலங்களிலும் புகார்மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அரசு சார்பாக எடுக்கவில்லை.
இந்த புகையினால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த ராமசாமி என்பவர் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார். இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று தனியார் தார் கலவை தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைத்த கருப்புக் கொடி கட்டி தொழிற்சாலையின் முன்பு பந்தல் அமைத்து இரண்டாவது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.