திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியம் வேலம்பட்டி ஊராட்சியில் சேர்வீடு, துவராபதி, ராக்காச்சி அம்மன் கோவில் தெரு, அண்ணாநகர், அசோக்நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.
மேலும், இங்கு15 மேல்நிலை குடிநீர் தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இவற்றிற்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் மோட்டார் மூலம் நீரேற்றி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தற்சமயம் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதால் நீர் ஆதாரங்களிலிருந்து போதிய நீர் கிடைக்காமல் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகியும் குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்பதால் அப்பகுதி மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
இதன் காரணமாக, நத்தம் யூனியன் அலுவலகத்திற்கு இன்று காலிக்குடங்களுடன் படையெடுத்த 200-க்கும் மேற்பட்ட வேலம்பட்டி பொதுமக்கள், அங்கு திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நத்தம் வட்டாட்சியர் ஜான் பாஸ்டின் டல்லஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, துரித நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்துச் சென்றனர். இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது.