திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள நத்தம் கிராமம் பாறைப்பட்டி பகுதியில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு சொந்தமான நிலம் என கூறி கோயிலுக்கு செல்லும் பொது பாதையை தடுத்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் நிலத்தை அளவீடு செய்ய அலுவலர்கள் சென்றபோது, எதிர் தரப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், சர்வேயர் ஊன்றிய கற்களைப் பிடுங்கி எறிந்து நில அளவீடு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இந்நிலையில் தனிநபர் ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தாங்கள் கோயிலுக்குச் செல்ல இயலவில்லை எனக் கிராம மக்கள் கூறுகின்றனர்.
எனவே கோயில் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களிடமிருந்து பாதையை மீட்டு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.