திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளை கடந்த 2012ஆம் ஆண்டு வன உயிரின சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதனையடுத்து வன உயிரின சரணாலயத்திற்குட்பட்டப் பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடுகளை விவசாயிகள் வனப்பகுதியில் உள்ள புல்வெளிகளில் மேய்க்கக்கூடாது, வன எல்லையை ஒட்டியுள்ளப்பகுதிகளில் விவசாயம் செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகள் என கிடுக்கிப்பிடி போடும் வனத்துறை, வன உயிரின சரணாலயத்திற்கு மேல் ஹெலிகாப்டர் பறக்கக்கூடாது என்ற விதிகளை மட்டும் கண்டும்காணாமல் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
சட்டத்தில் பாரபட்சமா..?
அடர்ந்த குடியிருப்புகள் சூழ்ந்துள்ள கொடைக்கானல் நகர்ப்பகுதி மக்கள், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்குப் பின்னர் கொடைக்கானலில் அடிக்கடி உலாவரும் ஹெலிகாப்டரால் அச்சத்தில் உள்ளதாகவும், மேலும் யானைகள், காட்டெருமைகள் மற்றும் சிறுத்தைகள் வாழும் அடர்ந்த புலிச்சோலை, ஆனைகிரி சோலை வனப்பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர் பறப்பதால், விலங்குகள் மிரண்டு இடம்பெயர்வது ஏற்படுவதாகவும் கூறும் விவசாயிகள், முக்கியப் புள்ளிகளுக்காக சட்ட விரோதமாக இயக்கப்படும் ஹெலிகாப்டர் சேவையை வனத்துறை கண்டும் காணாதது போல உள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
சாமானிய விவசாயிகளுக்கு ஒரு சட்டம், பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பும் அவர்கள், இதனை அரசு தலையிட்டு, குடியிருப்புகளுக்கு ஆபத்தாகவும் விலங்குகள் மிரளும் வண்ணமும் உலா வரும் ஹெலிகாப்டர் சேவையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:நீரில் மிதந்த பூக்களில் விளக்கேற்றி வழிபாடு - அற்புதங்கள் நிறைந்த திருவிழா