திண்டுக்கல்லில் கிராமப்புறங்களில் டெங்கு பாதிப்பு இருக்கிறதா என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், டெங்குவினால் இறப்பு விகிதம் 0.1 விழுக்காடு தான். பிறகு ஏன் இறக்கிறார்கள் என்றால் 10 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேல் உள்ள தாத்தா பாட்டிகள், ஈரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு டெங்கு நோய் தாக்குதல் வரும்போது இறக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த காலத்தில் யார் இறந்தாலும் அது டெங்குவினால் என்று பார்க்க வேண்டாம். டெங்கு குறித்து ஆய்வு செய்ய மாநில அளவில் ஒரு குழு அமைத்துள்ளோம். நேற்று வரை தமிழ்நாட்டில் 4,000 பேருக்கு டெங்கு உள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறோம். அந்தளவிற்கு நவீனமாக உள்ளோம். ஆனால் காலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிற நோயாளி இரவு 9 மணிக்குத் தானாக வீட்டிற்கு ஓடிவிடுகிறார்கள்.
அவர்களை நாங்கள் வீட்டுக்குச் சென்று கண்டுபிடிக்க மிகுந்த சிரமப்படுகிறோம். மதுரையில் டெங்கு பாதிக்கப்பட்ட மருத்துவர் இறந்தது தொடர்பாகக் கேள்வி எழுப்புகிறார்கள். அவர் சிகிச்சை பெற்ற பின் சரியாகி வீட்டுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்பதைத் தனியார் மருத்துவமனையில் உறுதி செய்துள்ளோம். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவசியம் 7 நாட்கள் விடுப்பு அளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளோம். அதைப் பள்ளி நிர்வாகத்தினர் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.