திண்டுக்கல் : திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பழனிக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாடு மாணவர்கள் மீதும் அநீதியாக திணிக்கப்பட்டது நீட் தேர்வு. சட்டப்பேரவையில் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நீட் தேர்வை நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.
தற்கொலை எண்ணங்களை கைவிட வேண்டும்
நிச்சயமாக பிரதமர், குடியரசுத் தலைவர் நினைத்தால் நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருந்து விளக்கப்படும். அதுவரை மாணவர்கள் மன தைரியத்துடன் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணங்களை கைவிட வேண்டும். பெற்றோர்கள் மாணவர்கள் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்கக்கூடாது.
ஒரு தேர்வு மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். தமிழ்நாட்டில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் அரசியல் பின்னணி இல்லாமல், முதல் முறையாக காவல்துறை பின்னனியில் உள்ள ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் நாகாலாந்தில் ஆளுநராக இருந்த போது நாகாலாந்து விவாகாரத்தை கையாண்ட விதம் மிகமிக மோசமானது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவரை மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு எத்தகைய ஆளுநர்கள் வந்தாலும் திறமையாக எதிர்கொள்ளும்” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் அய்யநேரி பகுதியைச் சேர்ந்த மாணவி அனுசியா தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு 40 விழுக்காடு தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க : 'திட்டங்களின் நிலையை தினமும் கண்காணிப்பேன்' - முதலமைச்சர் அதிரடி