திண்டுக்கல்: மாநகராட்சி காந்தி காய்கறி சந்தை உள்ளது. இங்கு திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகள் தினமும் கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் தினமும் அனுப்பப்பட்டு வருகிறது.
காய்கறி சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை வியாபார காய்கறி கடைகள் உள்ளன. அதேபோல் தினமும் விவசாயிகளிடமிருந்து கொண்டு வரப்படும் காய்கறி மூட்டைகளை இறக்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை காய்கறிகள் இறக்கும்போது சுமை தூக்கும் தொழிலாளருக்கும் காய்கறி மொத்த விற்பனை கடை வைத்திருக்கும் அபிபுல்லா என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அபிபுல்லா காய்கறி சந்தைக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களை கூட்டி வந்து கத்தி மற்றும் அரிவாளால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நான்கு பேரை வெட்டியுள்ளார்.
இதன் காரணமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிகளுக்கு செல்லவில்லை. அதேபோல் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து காய்கறி சந்தையில் மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் கடைகளை மூடியதால் இன்று காய்கறி சந்தையில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டது. அதேபோல் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட காய்கறிகளும் அப்படியே லாரிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலை சிற்றுண்டி திட்டத்தை ஆரம்பித்த முதலமைச்சரே அதை அவமானப்படுத்தியுள்ளார் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு