திண்டுக்கல்: தமிழ்நாடு பொது நூலகத்துறை மூலமாக நூலக நண்பர்கள் திட்டம் திண்டுக்கல்லில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திட்ட தொடக்க விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி எம்எல்ஏ செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத், கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், நூலகத்துறை இணை இயக்குநர் அமுதவள்ளி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடக்க விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் சேர்ந்துள்ள 350 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கைப்பை வழங்கப்பட்டது. பின்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்த திட்டத்திற்காக ரூ.56.25 லட்சம் செலவு செய்ய உள்ளோம்.
இதனை செலவு என சொல்வதை விட அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும். 12,500 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்தத் திட்டத்தில் 15 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் 25 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
அவர்கள் மூலம் குழந்தைகள், வயதானவர்கள், குடும்பப் பெண்கள் பயனடைவார்கள். வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஊர்ப்புற நூலகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம் - அமைச்சர் உதயநிதி பங்கேற்பு