திண்டுக்கல்: எருமைகார தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். மணிகண்டன் தேனி மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். மேலும், திண்டுக்கல்லில் தனது தந்தை ஜெயமுருகன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையையும் கவனித்துவந்தார்.
மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால், பர்னிச்சர் கடையை மணிகண்டனின் மனைவி கற்பகம் கவனித்து வந்துள்ளார். சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் மணிகண்டன் திண்டுக்கல்லுக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று (ஆகஸ்ட் 07) மாலை தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த மணிகண்டன் தனது பர்னிச்சர் கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, மனைவி கற்பகம் தனது மகனை தந்தையிடம் விட்டு விட்டு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் வந்த அடையாளம் தெரியாத கும்பல் கடைக்குள் இருந்த மணிகண்டனை சரமாரியாக வெட்ட தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்சியடைந்த அவரது மகன் கூச்சலிட்டவாறு கடையின் வெளியே சென்றுவிட்டார்.
காவல் துறை விசாரணை
இதற்கிடையில், அந்த கும்பல் மணிகண்டனின் தலையை முழுவதுமாக வெட்டி சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இது குறித்த தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையடுத்து, மணிகண்டனின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தொடர்ந்து, முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி திமுக பிரமுகர் கொலையில் அரசியல் போட்டி?