திண்டுக்கல் மாவட்டம் வி. கல்லுப்பட்டி பகுதியில் சிலர் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சுவதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அம்பாத்துரை காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சின்னப்பன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்குள் நுழைந்து ஆய்வுசெய்தனர்.
அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லம், பட்டை ஆகியவற்றை குடங்களில் ஊற வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அங்கு வந்த திண்டுக்கல் புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வினோத் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய ஊறலை ஆய்வுசெய்தார்.
பின்னர் சாராயம் காய்ச்சிய பன்னீர் செல்வம் (48), கோவிந்தராஜ் (38), கண்ணன் (26), குமார் (26) ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஊரடங்கிற்கு முன்பு பால் வியாபாரம், கூலி வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எனவும், வருமானம் இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அம்பாத்துரைக்குள்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் எனக் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:"நீங்க தர்லன்னா நாங்களே எடுப்போம்" - மதுப்பிரியர்கள் அட்டகாசம்!